''இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்" - WHATSAPP
- ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது
- டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.
மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய ஐடி விதிகளை அமலுக்கு கொண்டு வந்தது. இந்தியாவில் செயல்பட விரும்பும் அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் இந்த புதிய விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவில் இருந்து வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது. மேலும் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
"வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால், நாட்டை விட்டே இச்செயலி வெளியேற நேரிடும்" என டெல்லி உயர்நீதி மன்றத்தில் அந்நிறுவனம் வாதம் செய்தது.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்பது யூசர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதாகவும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது.
இந்த சட்டத்திற்கு இணங்குவது என்பது என்க்ரிப்ஷன் பிராசஸை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும் என்றும் அது தனியுரிமையை மீறும் ஒரு செயல் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வாதம் செய்யப்பட்டது.
ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு மெசேஜ்ஜை அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது.
தவறான தகவல்களை பரப்புபவர்கள் , வன்முறையை தூண்டுபவர்களை அடையாளம் காண உதவும் பொறுப்பு சமூக வலைத்தளங்களுக்கு இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.