ஆந்திராவில் எம்.எல்.ஏ. மீது வெடிகுண்டு வீச்சு- வெடிக்காததால் உயிர் தப்பினார்
- வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த மின் டெட்டனைட்டர் குண்டை எம்.எல்.ஏ.வின் காரின் மீது வீசினார்.
- எம்.எல்.ஏ.வின் கார் மீது எதற்காக குண்டு வீசினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பெனுகொண்டா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சங்கர நாராயணன்.
இவர் நேற்று மாலை கட்டம்தண்டா பஞ்சாயத்து குட்பட்ட கல்வி தண்டா பெனுகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் அரசு திட்டங்கள் குறித்து பொது கூட்டங்களில் பேசினார்.
பின்னர் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த மின் டெட்டனைட்டர் குண்டை எம்.எல்.ஏ.வின் காரின் மீது வீசினார். டெட்டனெட்டர் வெடிக்காததால் அதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ உயிர் தப்பினார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு காரின் மீது குண்டு வீசிய வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் குடிப்பள்ளியை சேர்ந்த கணேஷ் என்பதும் பாலசமுத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் மற்றும் டெட்டனேட்டர் ஆபரேட்டராக செயல்பட்டது தெரியவந்தது.
கணேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். எம்.எல்.ஏ.வின் கார் மீது எதற்காக குண்டு வீசினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.