இந்தியா

சீட் தராததால் தேம்பிய MLA.. முதல்வருக்கு கை கொடுக்க மறுத்த முன்னாள் அமைச்சர்.. அரியானா பாஜகவில் பூசல்

Published On 2024-09-06 10:14 GMT   |   Update On 2024-09-06 10:14 GMT
  • தனது பெயர் பட்டியலில் இருக்கும் என நம்பியதாக அவர் தேம்பித் தேம்பி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
  • பா.ஜ.க எம்.எல்.ஏ லக்ஷ்மண் தாஸ் நாபாவும் கட்சியிலிருந்து விலகியுள்ள நிலையில் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் சேர மும்முரம் காட்டி வருகிறார்.

அரியானா, பாஜக, சட்டமன்றத் தேர்தல், பாஜக, வேட்பாளர் பட்டியல், வீடியோ மாநிலத்தில் கடந்த 2014 முதல் பா.ஜ.க. தலைமயிலான அரசு ஆட்சியில் உள்ளது. தற்போது அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. முன்னதாக அக்டோபர் 1 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்த தேர்தல் ஆணையம் அதன்பின்னர் தேதியை மாற்றியுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கையும் அக்டோபர் 4 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 8 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது பாஜகவுக்குச் சாதகமான செயல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில் தேர்தலுக்கான தனது 67 வேட்பாளர்களின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது . இதில், லத்வா தொகுதியில் முதல்வர் நயாப் சிங் சைனி போட்டியிடுகிறார். பாஜக வெளியிட்ட பட்டியல் அக்கட்சியில் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தி உள்ளது. தங்களுக்கு சீட் மறுக்கப்பட்டதாக அமைச்சர், எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் பட்டியல் வெளியான மறுநாளே கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

ரணியா தொகுதிக்குத் தனது பெயர் அறிவிக்கப்படாத அதிருப்தியில் முன்னாள் துணைப் பிரதமர் தேவி லாலின் மகனும், மாநில எரிசக்தி மற்றும் சிறைத்துறை அமைச்சருமான ரஞ்சித் சிங் சவுதாலா பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகினார். சீட் கிடைக்காத விரக்தியில் பா.ஜ.க எம்.எல்.ஏ லக்ஷ்மண் தாஸ் நாபாவும் கட்சியிலிருந்து விலகியுள்ள நிலையில் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் சேர மும்முரம் காட்டி வருகிறார்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சஷி ரஞ்சன் பார்மரிடம் அவருக்கு ஏன் சீட் தரவில்லை என்று பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்ட பொழுது, தனது பெயர் பட்டியலில் இருக்கும் என நம்பியதாக அவர் தேம்பித் தேம்பி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுபோல தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் ஓபிசி பிரிவு தலைவரும் முன்னாள் அமைச்சருமான கரண் தேவ் காம்போஜ் கட்சி மீட்டிங்கில் முதலமைச்சர் நயாப் சிங் சைனியுடன் கை குலுக்க மறுத்த வீடியோவும் வெளியாகியுள்ளது. இதுபோல சீட் கிடைக்காதவர்கள் வெளிப்படையாகவே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதால் அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் பாஜக திணறி வருகிறது. 

Tags:    

Similar News