இந்தியா
நான்கு மாதங்களுக்கு பிறகு மணிப்பூரில் மொபைல் இணைய சேவை.. முதல்வர் அறிவிப்பு
- மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் காரணமாக கடந்த சில மாதங்களாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
- கலவரம் காரணமாக மணிப்பூரில் மொபைல் இணைய சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
மணிப்பூரில் கலவரம் காரணமாக கடந்த மே மாதம் நிறுத்தப்பட்ட மொபைல் இணைய சேவைகள் தற்போது நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் இன்று காலை வெளியிட்டார்.
போலி செய்திகள், தகவல்கள் மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் பரவுவதை தடுக்கும் வகையில், அரசு மொபைல் இணைய சேவைகளை மே 3-ம் தேதியில் இருந்து தடுத்து நிறுத்தி வைத்து இருந்தது. இந்த தடை இன்று மாநிலம் முழுக்க நீக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா மியான்மர் எல்லை வழியாக சட்டவிரோத ஊடுருவல்களை தடுத்து நிறுத்த மாநில அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், மத்திய அரசு மணிப்பூரில் உள்ள 60 கிலோமீட்டர் எல்லை பகுதியில் வேலி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசு அதிகாரி தெரிவித்து உள்ளார்.