மோடி, தனது தாய் இறந்தபோது மொட்டையடிக்கவில்லை, அவர் இந்து கிடையாது: லாலு பிரசாத் யாதவ்
- ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது.
- அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது
நேற்று பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பீகாரில் இதற்கு முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ராஷ்டிரிய ஜனதாதள கட்சி குடும்ப அரசியல் செய்கிறது என விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக அக்கூட்டத்தில் உரையாற்றிய லாலு பிரசாத் யாதவ், "நரேந்திர மோடிக்கு ஒரு குடும்பம் கிடையாது. ஆனால் எனக்கு நல்ல குடும்பம் உள்ளது. எனது உடல்நிலை பாதிக்கப்பட்ட பொழுது எனது மகள் ரோஷினி அவரது கிட்னியை எனக்கு தானமாக கொடுத்தார் என்று பேசினார்.
பீகார் பல சிறந்த ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. இதே காந்தி மைதானத்தில், நாட்டின் பெரிய தலைவர்கள் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தியுள்ளனர். பீகார் என்ன முடிவு எடுக்கிறதோ அதையே நாட்டு மக்கள் பின்பற்றுகிறார்கள். நாளை கூட அதுதான் நடக்கப்போகிறது
மேலும், பிரதமர் மோடி இந்து கிடையாது. ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது. அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது" என தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்த நிலையில், நான் 'மோடியின் குடும்பம்' என்ற வாசகத்தை பாஜகவினர் இன்று தனது X கணக்கில் இணைத்து வருகின்றனர்.