பிரிவினைவாத செயலை ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு: ஜம்மு-காஷ்மீர் அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை
- நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் வகையில்,
- செயல்படுவது கண்டறியப்பட்டால், சட்டப்பூர்வ கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்- அமித் ஷா
ஜம்மு-காஷ்மீரில் இயங்கி வந்த ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (தீவிரவாத குற்றச்செயல் நடவடிக்கை குற்றச்சாட்டில் ஜெயிலில் இருக்கும் யாசின் மாலிக் தலைமையில் இயங்கி வந்த அமைப்பு), காஷ்மீர் மக்கள் விடுதலை லீக் மற்றும் இந்த அமைப்பில் இருந்து பிரிந்து செயல்படும் நான்கு அமைப்புகள் ஆகியவற்றை தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, "நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் வகையில் செயல்படுவது கண்டறியப்பட்டால், சட்டப்பூர்வ கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (முக்தார் அகமகது வாஜா), ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (பாஷீர் அகமது டோட்டா), ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (குலாம் முகமது கான்), யாகூப் ஷேக் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (அஜிஸ் ஷேக்) ஆகிய அமைப்புகளுக்கு தனித்தனியாக தடை செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், முகமது யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி சட்டவிரோதமான அமைப்பு என மேலும் ஐந்து வருடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அமித் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் மூலம் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தை ஊக்குவித்த காரணத்திற்கான ஜம்மு-காஷ்மீர் மக்கள் விடுதலை லீக் அமைப்புக்கு ஐந்து வருட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களையும், அமைப்புகளையும் மோடி அரசு காப்பாற்றாது" எனத் தெரிவித்துள்ளார்.