சந்தேஷ்காளி ஷேக் ஷாஜகான் மீது பணமோசடி வழக்குப்பதிவு: வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை
- பெண்களை மிரட்டி பணம் பறித்ததாகவும், சொத்துகளை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு.
- உதவியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஷேக் ஷாஜகான் தலைமறைவாக உள்ளார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள சந்தேஷ்காளி என்ற பகுதியில் ஷேக் ஷாஜகான் என்பவர் பெண்களின் சொத்துகளை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பெண்களை கூட்டு பாலியல் செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தியதால் இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
ஷேக் ஷாஜகானை திரிணாமுல் காங்கிரஸ் பாதுகாக்கிறது என பா.ஜனதா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில் ஷேக் ஷாஜகான் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. அத்துடன் அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்பான ஆறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 5-ந்தேதி ரேசன் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது, ஷேக் ஷாஜகான் ஆதரவாளர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேஷ்காளி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஷேக் ஷாஜகானின் உதவியாளரக்ள் ஷிபு ஹஸ்ரா, உத்தம் சர்தார் ஆகியோரை மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இருந்த போதிலும் ஷேக் ஷாஜகான் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அமைக்கப்பட்டுள்ள முகாமில் புகார் அளிக்கலாம் என போலீசார தெரிவித்துள்ளனர்.