துப்பாக்கியுடன் தாய்.. AUDI காரை பறிமுதல் செய்த போலீஸ்.. சிக்கலில் பூஜா ஐ.ஏ.எஸ் - நடப்பது என்ன?
- தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார்.
- இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் நியமிக்கப்பட்டிருந்தார். யு.பி.எஸ்.சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்ற இவர் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது.
இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார். இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பூஜா புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.தேர்வு செயல்பாட்டில் சலுகைகள் பெற அவர் தன்னை பார்வை பாதிக்கப்பட்டவர் என்று குறப்பிட்டிருந்தார் என்று குற்றச்சாட்டும் எழுந்தது.
இதைப்போல பூஜாவின் தந்தை திலீப்கேத்கர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அகமத் நகரில் வஞ்சித் பகுஜன்கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டார். அப்போது வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு ரூ.43 லட்சம் ஆண்டு வருமானம் இருப்பதாகவும், 40 கோடி சொத்து இருப்பதாகவும் திலீப் கணக்கு காட்டி இருந்தார். ரூ.40 கோடி சொத்து வைத்துள்ளவர் கிரீமிலேயரில் இல்லை என்று சான்று பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுதொடர்பாக பூஜாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பூஜாகேத்கர் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் பூஜாவின் ஆடி சொகுசு காரை புனே போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். திருட்டு வழக்கில் சிக்கிய தனது உறவினர் ஒருவரை விடுவிக்கவும் பூஜா போலீசை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது