ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கம்மை பாதிப்பு
- காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை குரங்கம்மையின் அறிகுறிகள் ஆகும்.
- விமான நிலையங்கள், துறைமுகங்களில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.
ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து, உலகளவில் அந்த தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலும் குரங்கம்மை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா மாநிலத்தின் மலப்புரம் திரும்பிய 38 வயதுடைய நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குரங்கம்மை பாதிப்பு இருக்குமோ என அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அந்த நபர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலப்புரம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். மேலும் அவர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குரங்கம்மை அறிகுறி தென்பட்டால், சுகாதார அமைப்பினருக்கு தகவல் தெரிவித்து சிகிச்சை பெறும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.