இந்தியா

மும்பை BMW விபத்து: குடும்பத்தோடு தலைமறைவு.. சினிமாவை மிஞ்சும் எஸ்கேப் பிளான் - கைதானது எப்படி?

Published On 2024-07-10 03:08 GMT   |   Update On 2024-07-10 03:08 GMT
  • இந்த வழக்கு குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளிவந்தன.
  • மிஹிர் தனது காதலி வீட்டில் இருப்பதாக போலீசுக்கு துப்பு கிடைத்தது.

மும்பையில் பாஜக கூட்டணி ஷிண்டே சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா கடந்த ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமையன்று மதுபோதையில் BMW சொகுசு காரை இயக்கி ஏற்படுத்திய விபத்தில் காவேரி என்ற பெண் உயிரிழந்த நிலையில் அங்கிருந்து மிஹிர் தலைமறைவானான்.

 

 மிஹிரின் தந்தை மற்றும் அவருடன் காரில் வந்த டிரைவரை போலீசார் கைது செய்த நிலையில், மிஹிரை ஆறு தனிப்படைகள்அமைத்து வலைவீசி தேடிவந்தது மும்பை போலீஸ். இந்த வழக்கு குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளிவந்தன. விபத்தில் கார் பானட்டில் சிக்கி 1.5 கி.மீ தூரத்துக்கு இழுத்துசெல்லப்பட்டு உயிருக்கு போராடிய காவேரியை, வண்டியை நிறுத்தி காரில் இருந்து விடுவித்து கீழே சாலையில் கிடத்தியபின், மிஹிர் காரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கையில் அமர ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டிய டிரைவர் காவேரி மீது மீண்டும் காரை ஏற்றி இறக்கியுள்ளார்.

 

அதனபின்னர் மற்றொரு காரில்  மாயமான மிஹிர் தனது காதலி வீட்டில் இருப்பதாக போலீசுக்கு துப்பு கிடைத்தது. விபத்து ஏற்படுத்தியதும் கோரேகானில் உள்ள தனது காதலி வீட்டுக்கு மிஹிர் சென்று சேர்ந்ததும் மிஹிரின் காதலி அவனது சகோதரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்து மிஹிரை வேறொரு காரில் ஏற்றி போரிவாலியில் உள்ள தங்களின் வீட்டுக்கு அவனது சகோதரி அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கிருந்து மிஹிருடன் அவனது தாய், இரண்டு சகோதரிகள் மற்றும் அவனது நண்பன் என 5  பேரும் மும்பைக்கு 70 கிலோமீட்டர் தொலைவில் ஷாபூர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மிஹிர் மட்டும் தந்து நண்பனுடன் மும்பையில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள தானேவின் விரார் பகுதிக்கு சென்று பதுங்கியுள்ளான்.

ஐவரும் செல் போன்களை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். மிஹிரின் நன்பனின் போனை போலீசார் டேப் செய்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்   நேற்று அதிகாலை மிஹிரின் நண்பன் தனது போனை 15 நிமிடத்துக்கு ஸ்விட்ச் ஆன் செய்ததால் அவர்களின் மறைவிடம்  தெரிந்து போலீசார் மிஹிர் உட்பட அனைவரையும் கைது செய்தனர். மிஹிரின் தந்தை ராஜேஷ் ஷா தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிஹிர் ஷாவுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று விபத்தில் உயிரிழந்த காவேரியின் மகள் கூறியுள்ளார்.

Tags:    

Similar News