இந்தியா

"ஜெய் ஸ்ரீராம்" என சொல்ல மறுத்த இஸ்லாமியரை தாக்கி, தாடியில் தீ வைத்த மர்ம நபர்கள்- போலீஸ் விசாரணை

Published On 2023-12-01 14:59 GMT   |   Update On 2023-12-01 14:59 GMT
  • பாதிக்கப்பட்ட நபரின் முதுகில் கீறல்களும், முகத்தில் மற்ற காயங்களும் உள்ளன.
  • இது வகுப்புவாத காரணங்களைக் காட்டிலும் பணத்துக்கான தாக்குதலாகவே தெரிகிறது.

கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் இஸ்லாமிய நபர் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் ஹூசென்சாப் என்பவர், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், கடந்த 25ம் தேதி ஹொசப்பேட்டை நகரிலிருந்து கங்காவதி நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தன்னைத் தாக்கியதாகவும், பிறகு அந்த நபர்கள் தன்னிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, உடைந்த பீர் பாட்டிலின் துண்டுகளால் தனது தாடியை வெட்ட முயன்றதாகவும், தனது தாடியை தீ வைத்து எரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், என்னை விட்டுவிடும்படி கெஞ்சினேன். ஆனால், அவர்கள் தன்னை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும்படி வற்புறுத்தினர். எனக்கு பார்வையில் பிரச்சனை இருப்பதால், என்னால் அவர்களின் அடையாளங்களை காண முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

பிறகு, அங்கிருந்த ஆடு மேய்ப்பவர்கள் தன்னைக் காப்பாற்ற வந்தபோது, மர்ம நபர்கள் தன்னை கல்லால் தலையில் அடிக்க முயன்றதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த தாக்குதல் வகுப்புவாத தாக்குதலாக இல்லாமல் கொள்ளையாக நடந்ததாக தெரிகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, கொப்பல் காவல்துறை கண்காணிப்பாளர் யசோதா வந்தகோடி கூறுகையில்" பாதிக்கப்பட்ட நபரின் முதுகில் கீறல்களும், முகத்தில் மற்ற காயங்களும் உள்ளன. அவர் ஒரு பாட்டிலால் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இது வகுப்புவாத காரணங்களைக் காட்டிலும் பணத்துக்கான தாக்குதலாகவே தெரிகிறது. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

Tags:    

Similar News