பாஜகவின் வலிமையால் இஸ்லாமியர்கள் இனி 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' பாடுவார்கள் - யோகி சொன்ன பிளாஷ்பேக்
- இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் தற்போது ராம் ராம் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.
- பாஜகவின் வலிமையால் ஒரு நாள் அவர்கள் [இஸ்லாமியர்கள்] ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று கோஷமிடுவார்கள்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இது காஷ்மீர் மக்களின் நலனை பாதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறன. இதற்கிடையே சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துமுடிந்த நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது கட்டத் தேர்தல் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் - என்சிபி கூட்டணி ஆகியவை பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் உ.பி. மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் காஷ்மீரிலும் அரியானா சட்டமன்றத் தேர்தலுக்காகவும் பிரச்சார சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்நிலையில் சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து ஆதித்யநாத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அரியவாவில் பரிதாபாத் நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 2 நாட்களாக நான் ஜம்மு காஷ்மீரில் இருந்தேன். அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. எனவே நான் விமான நிலயத்தினுள் சென்றேன். அப்போது ஒரு மனிதர், 'யோகி சாஹேப் ராம் ராம்' என்று கூறி என்னை வரவேற்றார். அந்த மனிதர் ஒரு மௌலவி [இஸ்லாமிய மத போதகர்] என்று பின்னரே உணர்ந்தேன். ஒரு இஸ்லாமிய மத போதகரிடம் இருந்து ராம் ராம் என்ற வார்த்தைகள் வெளிப்பட்டது குறித்து ஆச்சர்யம் அடைந்தேன். சிறப்பு அந்தஸ்தை [சட்டப்பிரிவு 370 ஐ] நீக்கியதன் தாக்கமே இது. இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் தற்போது ராம் ராம் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.
பாஜகவின் வலிமையால் ஒரு நாள் அவர்கள் [இஸ்லாமியர்கள்] தெருக்கள் தோறும் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று கூட கோஷமிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். யோகிஆதித்யநாத்தின் பேச்சைக் கேட்டு பிரச்சார கூட்டத்தில் இருந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்பினர். மேலும் உத்தரப் பிரதேசத்தில் கடந்த 7 வருடங்களாக எந்த போராட்டங்களும் கலவரங்களும் நடக்கவில்லை என்றும் யோகி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.