இந்தியா

சட்டமன்றத்தில் ஆயுத எழுத்து கிளைமாக்ஸ்-ஐ Re-Create செய்த நவீன் பட்நாயக் - சுவாரஸ்ய வீடியோ

Published On 2024-06-19 02:48 GMT   |   Update On 2024-06-19 05:00 GMT
  • பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
  • முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் அம்மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. 24 வருடமாக ஒடிசாவில் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 147 இடங்களில் 78 இடங்களை பாஜகவும் 51 இடங்களை பிஜு ஜனதா தளமும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 14 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர்த்து 3 சுயேட்ச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒடிசாவின் புதிய முதல்வராக பாஜகவின் மோகன் சரண் மாஜி நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த முறை பதிவியேற்பவர்களில் 82 பேர் முதல் முறையாக எம்.எல்.ஏக்களாக பதியேற்பவர்கள் ஆவர்.

சட்டமன்றத் தேர்தலில் கன்டாபாஞ்சி மற்றும் கின்ஜிலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கின்ஜிலியில் வெற்றி பெற்ற நிலையில் கன்டாபாஞ்சில் பாஜக வேட்பாளர் லக்ஷ்மன் பக் என்பவரிடம் 16,334 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அதாவது, நவீன் பட்நாயக் கின்ஜிலியின் எம்.எல்.ஏ வாக மேடையில் பதிவேற்றபின் இறங்கி நடந்து வரும்போது கன்டாபாஞ்சில் அவரை தோற்கடித்து முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

உடனே பட்நாயக் ' ஓ நீங்கள் தான் என்னை தோற்கடித்தீர்கள்' என்று கூறியபடி அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து அகன்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஆயுத எழுத்து' படத்தில் பழம்பெரும் அரசியல்வாதியாக இருக்கும் பாரதிராஜாவும் முதல்முறையாக சட்டமன்றத்துக்கு வரும் சூர்யாவும் கிளைமாக்சில் சந்தித்து பேசும் காட்சியை தற்போது ஒடிசா சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் பிரதி செய்வதாக அமைத்துள்ளது என நெட்டிசன்கள் அபிப்பிராயப்படுகின்றனர். முன்னதாக நவீன் பட்நாயக் பதியேற்க சட்டமன்றத்துக்குள் வரும்போது பாஜகவினர் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 

 

Tags:    

Similar News