நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: டெல்லி மக்களை அச்சுறுத்திய அதிர்வு
- நிலநடுக்கம் அயோத்தியா நகருக்கு வடக்கே, மையம் கொண்டிருந்தது
- இது கடந்த 4 நாட்களில் நேபாளத்தை தாக்கும் 3-வது நிலநடுக்கம்
இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் என்.சி.ஆர். (National Capital Region) எனப்படும் தேசிய தலைநகர் பகுதியில் இன்று மதியம் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று மாலை 04:15 மணியளவில், ரிக்டர் கணக்கில் 5.6 அளவாகவும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும், நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் அறிவித்தது. இந்த அதிர்வின் மையப்பகுதி உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியா பகுதிக்கு வடக்கே 233 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
கடந்த 4 நாட்களில் நேபாளத்தை தாக்கிய 3-வது நில அதிர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கம் நேபாளத்தில் ஏற்படுத்திய தாக்கம், தலைநகர் புது டெல்லியில் அதிர்வாக உணரப்பட்டது.
டெல்லியில், வீடுகளில் பொருட்கள் பலமாக குலுங்கியதாக மக்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக பெருமளவு கட்டிட சேதங்களோ அல்லது உயிர்சேதமோ ஏற்படவில்லை.
சில தினங்களுக்கு முன் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150 பேருக்கும் மேல் உயிரிழந்தனர். இப்பின்னணியில் இன்று ஏற்பட்ட டெல்லி நில அதிர்வால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.