இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜியா? - கங்கனாவுக்கு சுபாஷ் சந்திரபோஸ் குடும்பம் கண்டனம்
- சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் பேசியுள்ளார்
- சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லை - நெட்டிசன்கள்
பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசி அதிர வைத்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லையே என இணையத்தில் பலரும் இந்த காணொலியைப் பகிர்ந்து கேலி செய்கின்றனர்.
இந்நிலையில், நாட்டின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என கங்கனா ரனாவத் கூறியதற்கு நேதாஜி குடும்பம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போஸ் குடும்பத்தை சேர்ந்தவரான சந்திரகுமார் போஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"தங்கள் அரசியல் ஆசைக்காக வரலாற்றை சிதைக்க கூடாது. போஸ் ஒரு அரசியல் சிந்தனையாளர், போர் வீரர், அரசியல்வாதி, தொலைநோக்கு பார்வையுடையவர். இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்துப் போராடிய ஒரே தலைவர். அத்தகைய தலைவருக்கு நாம் கொடுக்க கூடிய உண்மையான மரியாதை என்பது அவரது சித்தாந்தத்தை பின்பற்றுவது தான்" என்று பதிவிட்டு உள்ளார்.