பெண்கள், குழந்தைகளின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களவையில் மணிப்பூர் எம்.பி. உணர்ச்சிகரமான பேச்சு
- சொந்த வீட்டிற்கு வர முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல் கேட்கவில்லையா?.
- 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதிக்குக்கு பிறகு மத்திய மந்திரிகள் மணிப்பூர் வராதது ஏன்?.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மணிப்பூர் (Outer Manipur) காங்கிரஸ் எம்.பி., மணிப்பூர் வன்முறை தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து உணர்ச்சிப்பூர்வமான பேச்சை பதிவு செய்தார்.
இன்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆல்ஃப்ரட் ஆர்தர் கூறியதாவது:-
பிரதமர் மோடி வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலமான மணிப்பூருக்கு வர வேண்டும். சொந்த வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் சொந்த வீட்டிற்கு வர முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல் கேட்கவில்லையா?.
மத்திய மந்திரிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒவ்வொரு வாரமும் 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதிக்குக்கு முன் வந்த நிலையில், அதன்பின் மணிப்பூர் வராதது ஏன்?.
பிரதமர் மோடி மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன் சிங்கை ஏன் மாற்றவில்லை. ஒருவரை மாற்றினால் அமைதியை கொண்டு வர முடியும் என்ற நிலையில், அவரை மாற்ற ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது.
இந்த வன்முறைக்கு ஒரு நபர்தான் காரணம் என ஒரு சமூகத்தினர் கூறுகிறார்கள். முதல்வரை விட நீங்கள் 49 உறுப்பினர்களை அதிகமாக பெற்றுள்ளீர்கள். பிரதமர் மோடி அவரை மாற்ற வேண்டும். அமைதி கொண்டு வருவதற்காக ஒருவரை மாற்றுவது கடினமா? உங்களால் சிறிய மாநிலத்தில் அமைதியை கொண்டு வர முடியவில்லை என்றால், எப்படி மிகப்பெரிய நாட்டில் அமைதியை நிலைநாட்டுவீர்கள்?
மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை நான் பார்வையிட்டேன். இந்த நேரத்தில், மணிப்பூர் மிகக் குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட மாநிலமாகவும், அதிக பணவீக்கத்தைக் கொண்ட மாநிலமாகவும் உள்ளது என்பதை அவர் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்று நினைக்கிறேன். எது மக்கள் நட்பு மற்றும் ஒரு நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதனை புரிந்துகொள்ள உங்களுக்கு ராக்கெட் அறிவியல் தேவையில்லை.
இவ்வாறு ஆல்ஃபர்ட் ஆர்தர் தெரிவித்துள்ளார்.