இந்தியா

நிபா வைரஸ்- கேரளாவில் 26,430 வீடுகளில் காய்ச்சல் கணக்கெடுப்பு

Published On 2024-07-25 06:05 GMT   |   Update On 2024-07-25 06:05 GMT
  • 300 பேருக்கு கீழ் இருந்த அந்த எண்ணிக்கை தற்போது 472 ஆக அதிகரித்துள்ளது.
  • நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. டெங்கு, டைபாய்டு, எலி மற்றும் பன்றி காய்ச்சல்கள் மட்டுமின்றி வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை நோய்களும் பரவியது.

இந்தநிலையில் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரசுக்கு பலியானான். கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

இதையடுத்து நிபா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை களமிறங்கியது. பலியான சிறுவனின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்தது. குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

300 பேருக்கு கீழ் இருந்த அந்த எண்ணிக்கை தற்போது 472 ஆக அதிகரித்துள்ளது. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்துள்ளது.

நிபா வைரஸ் பாதிப்பு உள்ள இடங்களில் ஆய்வு செய்வதற்காக புனேவில் இருந்து வந்துள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையினான நிபுணர்கள் குழுவினர் வவ்வால்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிவா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மாநில சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் பரவல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. அனக்காயம் ஊராட்சியில் 95 குழுக்களும், பாண்டிக்காடு ஊராட்சியில் 144 குழுக்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

இந்த 2 ஊராட்சிகளிலும் நேற்று 8,376 ஆயிரம் வீடுகளில் சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தினர். இதுவரை 26ஆயிரத்து 430 வீடுகளில் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News