இந்தியா

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தட்சிண கன்னடா, குடகில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Published On 2023-09-15 06:19 GMT   |   Update On 2023-09-15 06:19 GMT
  • எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
  • எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.

பெங்களூரு:

கேரளாவில் 'நிபா' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேருக்கு 'நிபா' வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நிபா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பீதி ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்திலும் நிபா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் கேரள எல்லையில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் கேரள மாநில எல்லையில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்திலும் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தட்சிண கன்னடா மற்றும் அண்டை மாநில எல்லையோர மாவட்ட அதிகாரிகளுக்கு காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கோழிக்கோடு வழியாக கர்நாடக வருபவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தகுந்த மருந்து, மாத்திரைகள் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் கேரள எல்லையில் இருக்கும் குடகு, தட்சிண கன்னடா பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News