இந்தியா

நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு டெல்லியில் மீண்டும் முகாம்-பரபரப்பு

Published On 2024-07-17 04:20 GMT   |   Update On 2024-07-17 04:20 GMT
  • டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவரும் போட்டி போட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

திருப்பதி:

பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இருவரும் தங்களுடைய மாநிலங்களுக்கு அதிக நிதி பெறுவதில் ஆர்வமாக உள்ளனர்.

சந்திரபாபு நாயுடு கடந்த 15 நாட்களுக்கு முன்பு 2 நாட்கள் டெல்லியில் முகாமிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினார்.

அப்போது பிரதமரிடம் ஆந்திர மாநில பிரிவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் 7 அம்ச வளர்ச்சி குறித்த பட்டியலை வழங்கினார்.

இந்த சந்திப்பு நடந்த 5 நாட்களில் ஆந்திர மாநிலத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட் கூட்டம் விரைவில் வர உள்ளது. இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உத்தரவின் பேரில் அவருடைய கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா கடந்த திங்கட்கிழமை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

அப்போது பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து நேற்று 2-வது முறையாக சந்திரபாபு நாயுடு டெல்லி சென்றார். மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்று காலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சந்திரபாபு நாயுடு சந்திப்பு நடைபெற இருந்தது. இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திரா திரும்பினார்.

மத்திய பட்ஜெட் அறிவிப்பு வெளியாகும் முன்பே சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய கூட்டணி தந்திரத்தை பயன்படுத்தி நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இது டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News