குடியரசு துணைத் தலைவராக விரும்பினார் நிதிஷ்குமார்- கூட்டணி முறிவு குறித்து பாஜக விளக்கம்
- நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- தேஜஸ்வி யாதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் விசாரணை தொடங்கி உள்ளது.
பீகார் மாநிலத்தில் திடீர் அரசியல் திருப்பமாக பாஜகவுடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 7 கட்சிகள் இணைந்த புதிய மெகா கூட்டணி சார்பில் முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
துணை முதல்வராக லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இருவருக்கும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிதிஷ்குமார் குடியரசு துணைத் தலைவராக விரும்பினார் என்று பாஜக மூத்த தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது டூவிட்டர் பதிவில், நிதிஷ்குமாருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று அவரது கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலர் தம்மிடம் வலியுறுத்தி வந்தனர், அவர் குடியரசு துணைத் தலைவர் ஆனால், நீங்கள் பீகார் முதலமைச்சராகலாம் என பேரம் பேசினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கு வங்க முன்னாள் ஆளுனர் ஜக்தீப் தன்கரை இந்த தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்தது. அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ஊழல் வழக்கில் விசாரணை தொடங்கி உள்ளது. அவருக்கு எதிராக சாட்சியம் உள்ளது. அதன் விளைவாக அவர் சிறைக்கு செல்லலாம் என்றும் சுசில்குமார் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நிதிஷ்குமார் எங்களுக்கு துரோகம் செய்தது போன்று ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கும் துரோகம் செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் அல்லாத அரசியல் என்ற கூறி வந்த நிதிஷ்குமாரின் அரசியல் நிறைவு பெற்று விட்டதா என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி உள்ளார்.