வழிபாடு

தசராவுக்கு 'நோ'.. ராவணனின் இறப்புக்கு துக்கம் அனுசரிக்கும் உ.பி. கிராமம் - சுவாரஸ்ய காரணம்

Published On 2024-10-12 16:35 GMT   |   Update On 2024-10-12 16:51 GMT
  • ராவணனின் பொம்மையை தசராவின்போது எரித்து கொண்டாடுவது வடமாநிலங்களில் வழக்கமாக உள்ளது.
  • ராம்லீலா நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவது தங்களின் கிராமத்துக்கு துரதிஷ்டத்தை வரவழைக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர்.

நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியான ராவண வதம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிஸ்ராக் [Bisrakh] என்ற கிராமம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ராவணனின் இறப்புக்கு துக்கம் அனுசரிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.

ராமாயணக் கதைப்படி ராவணன் தீய சக்தியாக சித்தரிக்கப்பட்டு அவரின் பொம்மையை தசராவின்போது எரித்து கொண்டாடுவது வடமாநிலங்களில் வழக்கமாக உள்ளது. மாறாக இந்த பிஸ்ராக் கிராமத்தில் ராவணன் ஆத்மா சாந்தியடைவதற்காகப் பூஜைகள் நடத்தப்படுகிறது.

ராவணன் தங்களின் பிஸ்ராக் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தாங்கள் அனைவரும் ராவணனின் வழித்தோன்றல்கள் என்றும் இம்மக்கள் நம்புகின்றனர். எனவே தங்களின் முத்தையான ராவணனின் புத்திக்கூர்மையையும், கடவுள் சிவன் மீது அவர் வைத்திருந்த பக்தியையும் போற்றுகின்றனர்.

ராம்லீலா நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவது தங்களின் கிராமத்துக்கு துரதிஷ்டத்தை வரவழைக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர். இந்த கிராமத்தில் சிவன்கோவிலில் உள்ள லிங்கம் முற்காலத்தில் ராவணன் மற்றும் அவரது தந்தையால் வழிபடப்பட்டது என்று இவர்கள் கருதுகின்றனர். இவர்களை போல ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள மந்தோர் கிரமத்தில் ராவணன் மூதாதையாக கருத்துப்பட்டு அம்மக்களால் வழிபடப்பட்டு வருகிறார்.

 

தற்போது தங்கள் மூதாதை ராவணனுக்காகக் கோவில் கட்டவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். கதைப்படி ராவணன் இலங்கையைச் சேர்ந்தவர் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், வெவ்வேறு பகுதிகளில் ராமாயணம் வெவ்வேறு வகையாகப் புழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர், மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டம், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் ஆகியவற்றில் ராவணனுக்குக் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News