இந்தியா

மல்லிகார்ஜூன் கார்கே,சசி தரூர்,கே.சி.வேணு கோபால்

ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக யாரும் இருக்க மாட்டார்கள்- கே.சி.வேணுகோபால்

Published On 2022-10-17 11:33 GMT   |   Update On 2022-10-17 11:35 GMT
  • காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க முடியும்.
  • நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை வெளிபடுத்துகிறோம்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிட்டனர். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வாக்களித்தனர், கர்நாடகா மாநிலத்தில் ராகுல்காந்தி தமது வாக்கை பதிவு செய்தார்.

மாலை 4.30 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அக்டோபர் 19-ந்தேதி (நாளை மறுநாள்) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் கேரளா மாநிலத்தில திருவனந்தபுரத்தில் தமது வாக்கை பதிவு செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கட்சித் தலைவரை ஜனநாயக முறையில் தேர்வு செய்யும் நிகழ்வில் பங்கேற்றிருப்பது என்பது ஒட்டுமொத்த காங்கிரஸுக்கும் பெருமையளிக்கும் தருணம் என்றார்.

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க முடியும் என்றும், நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை வெளிபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்சியில் ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதிபட கூறினார். இதனிடையே, ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படியே வாக்களித்தனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்தன் திரிவேதி குறிப்பிட்டார். இதுபோன்ற தேர்தல் வேறு எந்த கட்சியிலும் நடந்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

Similar News