அழாமல் இருப்பதற்காக பிறந்த குழந்தைகளின் வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
- குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை.
- நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.
மும்பை :
மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் பிரியா காம்ப்ளே. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள மாநகராட்சி சாவித்ரிபாய் புலே மகப்பேறு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி குழந்தைக்கு பால் புகட்ட பிரியா காம்ப்ளே தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு குழந்தையின் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை. மறுநாள் காலை 8 மணிக்கு வரும்படி அவரிடம் கூறி அனுப்பினர். இதன்பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.
அப்போதும் தனது குழந்தையின் வாயில் ஒட்டிய டேப் அகற்றப்படாமல் இருந்ததை கண்டு நர்சிடம் விசாரித்தார். இதற்கு குழந்தை அழாமல் இருப்பதற்காக டேப் ஒட்டியதாக நர்ஸ் தெரிவித்தார். இதனை கேட்டு திகைத்துப்போன பிரியா காம்ப்ளே மற்ற குழந்தைகளையும் கவனித்தார். அங்கிருந்த மேலும் 3 குழந்தைகளுக்கும் இதே போன்று டேப் ஒட்டப்பட்டு இருந்தது.
இதுபற்றி அவர் முன்னாள் கவுன்சிலர் ஜக்ருதி பாட்டீலிடம் தெரிவித்தார். அவர் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உதவி கமிஷனரிடம் புகார் அளித்தார். குழந்தையின் உயிருக்கு ஆபத்தான செயலில் ஈடுபட்ட நர்சை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டது.