சொகுசு கார் அனுப்பவில்லை என்ற ஆத்திரத்தில் ஊழியரை தாக்கிய ஒடிசா கவர்னரின் மகன்
- ஜூலை 7 ஆம் தேதி லலித்குமாரும் அவருடன் வந்த 5 நபர்களும் என்னை அடித்து உதைத்தனர்.
- லலித் குமார் அவரது காலில் உள்ள சூவை நக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்
ஒடிசா மாநிலத்தின் கவர்னராக ரகுபர் தாஸ் பொறுப்பில் உள்ளார். அவரது மகன் லலித் குமார் அப்பாவை பார்க்க ஒடிசா வந்திருக்கிறார். அப்போது அவரை அழைத்து வர பூரி ரெயில் நிலையத்திற்கு கவர்னர் மாளிகை சார்பில் கார் அனுப்ப பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னை அழைத்து வர சொகுசு கார் அனுப்பப்படவில்லை என்று ஆத்திரத்தில் கவர்னர் மாளிகை வளாகத்திலேயே பைகுந்த பிரதான் என்ற அதிகாரியை லலித் குமார் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக ராஜ்பவனின் பொறுப்பு அதிகாரி பைகுந்த பிரதான் கவர்னர் மாளிகையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரில், "ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி பூரி ராஜ்பவனுக்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தங்குமிடங்கள் தொடர்பான வேலைகளை கவனிக்க ஜூலை 5 ஆம் தேதி முதல் ராஜ் பவனில் நான் வேலை செய்து வந்தேன்.
இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி லலித்குமாரும் அவருடன் வந்த 5 நபர்களும் என்னிடம் தகாத முறையில் பேசியதோடு என்னை அடித்து உதைத்தனர். மேலும் லலித் குமார் அவரது காலில் உள்ள சூவை நக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.