இந்தியா

ஒடிசா ரெயில் விபத்து: மேற்கு வங்காளத்தை சேர்ந்த 61 பேர் உயிரிழப்பு

Published On 2023-06-04 13:55 GMT   |   Update On 2023-06-04 13:55 GMT
  • இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பஹனகா ரெயில் நிலையம் அருகே மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த லூப் லைனில் வந்ததே ஒட்டுமொத்த விபத்துக்கும் காரணமாக அமைந்துள்ளது. இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். 1175 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 61 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய 56 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்கள்; மேலும் 279 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 182 பேரை காணவில்லை.

நான் ரெயிவே மந்திரியாக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் என்ஜின்கள் குறிப்பிட்ட திறனுடன் உள்ளதா?

நான் ரெயில்வே மந்திரியாக இருந்த காலத்திலும், நிதீஷ் குமார் அல்லது லாலு பிரசாத் யாதவ் காலத்திலும் பலர் இறந்ததாக சில பிரிவினர் கூறுகின்றனர். நான் ரெயில்வே மந்திரியாக இருந்த காலத்தில் புதிய சிக்னல் அமைப்பு மற்றும் விபத்து தவிர்ப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Tags:    

Similar News