இந்தியா

தந்தையின் செல்வாக்கினால் ஐ.ஏ.எஸ் ஆனேனா? - அவதூறு வழக்கு தொடர்ந்த ஓம் பிர்லா மகள்

Published On 2024-07-23 09:26 GMT   |   Update On 2024-07-23 09:26 GMT
  • சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
  • இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2 ஆவது முறையாக பாஜக எம்.பி ஓம் பிர்லா தேர்வாகியுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பல்ராம் ஜாகருக்கு பிறகு 39 வருடங்கள் கழித்து இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆகும் பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட ஓம் பிர்லாவுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அகாடெமியில் பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்.

மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த அஞ்சலி பிர்லா தனது தந்தையின் செல்வாக்கினால் தேர்வு எழுதாமலேயே ஐ.ஏ.எஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம் சாட்டினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை அஞ்சலி பிர்லா மறுத்துள்ளார். தன் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று நோக்கத்தில் தான் இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பும் இத்தகைய சமூக வலைத்தள பதிவுகளை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News