இந்தியா

ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்ற விளையாட்டு வீராங்கனை சுருண்டு விழுந்து உயிரிழப்பு

Published On 2023-08-30 09:16 GMT   |   Update On 2023-08-30 09:16 GMT
  • கோழிக்கோடு மாவட்டம் மேரிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் ஜிப்சி ஜோசப்.
  • ஜிப்சியின் கணவர் ஜோசப் ரிபாலோ மலப்புரம் மாவட்ட சமூக நல அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அதில் இருந்தே மாநிலம் முழுவதும் ஓணம் கொண்டாட்டங்கள் நடந்தபடி இருந்தது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் விளையாட்டு வீராங்கனை சுருண்டு விழுந்து இறந்தார். கோழிக்கோடு மாவட்டம் மேரிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் ஜிப்சி ஜோசப் (வயது52).

முன்னாள் தேசிய கைப்பந்து வீராங்கனையான இவர் மலப்புரம் மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் தான் மேரிக்குன்னு பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடந்த ஓணம் கொண்டாட்டத்தில் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

அங்கு நடத்தப்பட்ட இசை நாற்காலி போட்டியில் பங்கேற்று விளையாடியபோது ஜிப்சி திடீரென சுருண்டு விழுந்தார். சுயநினைவின்றி காணப்பட்ட அவர் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

ஜிப்சியின் கணவர் ஜோசப் ரிபாலோ மலப்புரம் மாவட்ட சமூக நல அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓணம் கொண்டாட்டத்தில் முன்னாள் விளையாட்டு வீராங்கனை சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News