இந்தியா (National)

கைதான சுகைல்-சுரபி

விமானத்தில் தங்கம் கடத்திய விவகாரத்தில் மேலும் ஒரு விமான ஊழியர் கைது

Published On 2024-06-01 06:02 GMT   |   Update On 2024-06-01 06:02 GMT
  • தங்கம் கடத்தல் விவகாரத்தில் பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விமான பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது
  • சுரபி காதுன், கண்ணூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு மஸ்கட் நாட்டில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக விமான பணிப்பெண் கொல்கத்தாவை சேர்ந்த சுரபி காதுன் கைது செய்யப்பட்டார். அவர் ரூ.60 லட்சம் மதிப்பிலான 960 கிராம் தங்கத்தை மலக்குடலில் மறைத்து கடத்தி வந்தது வருவாய் புலனாய்வு இயக்குனரக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கம் கடத்தல் விவகாரத்தில் பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விமான பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது இது தான் முதல்முறை என கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர் தங்கம் கடத்தி வருவது இது முதல்முறை அல்ல என தெரியவந்தது. கேரளாவைச் சேர்ந்த தங்கம் கடத்தல் கும்பலுக்காக அவர் கடத்தல் செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சுரபி காதுன், கண்ணூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் மேலும் ஒரு விமான ஊழியருக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரையும் நேற்று கைது செய்தனர். அவரது பெயர் சுகைல் தனலோட் (வயது 33). கேரள மாநிலம் கண்ணூர் தில்லங்கேரியை சேர்ந்த அவர், சுமார் 10 ஆண்டுகளாக ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் மூத்த கேபின் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தான் சுரபி காதுனை, கடத்தல் கும்பலில் சேர்த்து விட்ட தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தங்கம் கடத்தல் விவகாரத்தில் விமான ஊழியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News