இந்தியா

சீனாவில் இருந்து டெல்லி வாடிக்கையாளருக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு வந்த 'ஆன்லைன் டெலிவரி'

Published On 2023-06-25 04:12 GMT   |   Update On 2023-06-25 04:12 GMT
  • சில மாதங்களில் இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
  • நிதின் அகர்வால் தனது ஆர்டரை ரத்து செய்யவில்லை.

சாப்பிடும் உணவு பொருட்கள் முதல் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்கள் வரை 'ஆன்-லைன்' மூலமாக ஆர்டர் செய்து பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு 'ஆன்-லைன்' மூலமாக ஆர்டர் செய்த பொருள் 4 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

டெல்லியை சேர்ந்தவர் நிதின் அகர்வால். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் சீனாவை சேர்ந்த பிரபல 'ஆன்-லைன்' தளமான அலி எக்ஸ்பிரசில் ஒரு ஆர்டர் செய்தார். அதோடு ஆர்டருக்கான பணத்தையும் செலுத்தினார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சீனாவில் சர்வதேச போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அவரது ஆர்டர் வினியோகம் செய்யப்படவில்லை.

பின்னர் சில மாதங்களில் இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2020-ம் ஆண்டு மத்திய அரசு 'டிக்-டாக்' உள்ளிட்ட பெரும்பாலான சீன செயலிகளுக்கு தடை விதித்தது. அதில் அலி எக்ஸ்பிரஸ் செயலியும் இடம்பெற்றிருந்தது. இதனால் அந்த செயலியின் சேவைகள் இந்தியாவில் தடைபட்டதால் பல்லாயிரக்கணக்கான ஆர்டர்கள் அனுப்ப முடியாத நிலை உருவானது. இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது ஆர்டரை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றனர்.

ஆனால் நிதின் அகர்வால் தனது ஆர்டரை ரத்து செய்யவில்லை. இந்நிலையில் கடந்த 21-ந் தேதி அவருக்கு மற்றொரு டெலிவரி நிறுவனத்தில் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதில், 4 வருடங்களுக்கு முன்பு தான் ஆர்டர் செய்த பொருள் இருந்தது. இதைக்கண்டு வியப்பும், ஆனந்தமும் அடைந்த நிதின் அகர்வால் பார்சலின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அது தற்போது வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் நீங்கள் ஆர்டர் செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags:    

Similar News