இந்தியா

மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி

இதெல்லாம் ஒரு பிரச்சனையா..? பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க வேண்டாம்.. மத்திய மந்திரி வேண்டுகோள்

Published On 2023-05-24 09:41 GMT   |   Update On 2023-05-24 09:41 GMT
  • சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால் எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. அத்துடன், சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உளள்து.

எனவே, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடும் அவமதிப்பு மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை. அதேசமயம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளது.

நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

இந்நிலையில், திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை 19 எதிர்க்கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முன்பும் பாராளுமன்ற வளாகத்தில் கட்டிடங்களை பிரதமர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள் என்றும், இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'மக்களவை சபாநாயகர் தான் பாராளுமன்றத்தின் பொறுப்பாளர், அவர்தான் பிரதமரை அழைத்துள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா வரலாற்று நிகழ்வு. ஒவ்வொரு நிகழ்வையும் அரசியலாக்குவது நல்லதல்ல. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வரலாற்று நிகழ்வு நடக்கிறது' என்றும் ஜோஷி தெரிவித்தார்.

Tags:    

Similar News