இந்தியா

பிரதமர் பேசவேண்டும் என்கிறார்கள்.. ஆனால் மக்களவையை செயல்பட அனுமதிக்கவில்லை: மத்திய மந்திரி குற்றச்சாட்டு

Published On 2023-08-10 11:30 GMT   |   Update On 2023-08-10 11:30 GMT
  • மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் மவுனம் காப்பதாக கூறி கேள்வி எழுப்பினார்.
  • காங்கிரஸ் ஆட்சியின் போது வடகிழக்கு மாநிலத்தில் நடந்த மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளை சிந்தியா நினைவூட்டினார்.

புதுடெல்லி:

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால் பிரதமர் மோடி இந்த விஷயத்தை கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது கடந்த மூன்று தினங்களாக விவாதம் நடத்தப்பட்ட நிலையில், இன்று பிரதமர் மோடி பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

இதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் மக்களவைக்கு வந்தார். ஆனால் அவையில் வழக்கம்போல் அமைதியற்ற சூழல் நிலவியது. கடும் அமளிக்கு மத்தியில் விவாதம் தொடர்ந்தது.

பிரதமர் மோடி மக்களவைக்குள் நுழைந்ததை அடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, மணிப்பூரில் நடந்த வன்முறையை நாட்டில் உள்நாட்டுப் போர் என்று கூறி, இந்த விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பதாக கூறி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் ஆட்சியின் போது மணிப்பூர் மாநிலத்தில் நடந்த மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளை நினைவூட்டினார்.

மேலும் அவர் பேசும்போது, 'பாராளுமன்றத்திற்கு வெளியே மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் உணர்வுபூர்வமான கருத்தை தெரிவித்தார். ஆனால், பிரதமர் பாராளுமன்றத்தல்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் (எதிர்க்கட்சி) வலியுறுத்தினார்கள். எந்த தேதியிலும் நேரத்திலும் விவாதத்திற்கு நாங்கள் தயார் என்று உள்துறை மந்திரி மீண்டும் மீண்டும் கூறினார். ஆனால், 17 நாட்களாக அவையை செயல்பட விடவில்லை' என்றார்.

வெறுப்பு சந்தையில் அன்பின் கடையை திறப்பதாக காங்கிரஸ்காரர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கடை ஊழல், பொய், சமாதானம், ஆணவத்துக்கான கடை. அவர்கள் கடையின் பெயரை மட்டுமே மாற்றுகிறார்கள், ஆனால் தயாரிப்பு அப்படியே உள்ளது என்றும் சிந்தியா குற்றம்சாட்டினார்.

Tags:    

Similar News