இந்தியா

பாராளுமன்ற மேல்சபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி- விவாதம் நடத்த அனுமதி மறுப்பதாக குற்றச்சாட்டு

Published On 2024-07-26 08:47 GMT   |   Update On 2024-07-26 08:47 GMT
  • பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.
  • மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பல்வேறு விவகாரங்களை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் 5-ம் நாளான இன்று பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.

அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாங்கள் கொடுத்த நோட்டீசை அவைத்தலைவர் நிராகரித்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே பட்டியலிடப்பட்ட அலுவல்களை ஒத்திவைத்து விட்டு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று விதி எண் 267-ன் கீழ் பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

அந்த நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்தார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேல்-சபையில் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி அவைத்தலைவர் வலியுறுத்தினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நின்றபடி, தாங்கள் கொடுத்த நோட்டீசுகளை நிராகரித்து ஏன்? என்று கேள்வி எழுப்பியபடி இருந்தனர். காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கூறும்போது, முக்கிய அலுவல் இருந்தால் மற்றொரு நாளில் விவாதிப்பதாக கூறலாம். ஆனால் நிராகரிப்பது ஏன்? அவை நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டுள்ளது என்றார்.

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பேசும்போது, மாநிலங்களவை தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி நீங்கள் நேரம் இல்லா நேரத்தில் ஆளும் தரப்பு கொடுக்கும் பிற விவகாரங்களை எடுத்து கொள்ளும்போது அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கொடுக்கும் நோட்டீசுகளை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஆளும் தரப்புக்கு நேரம் கொடுக்கும்போது எதிர்க்கட்சிகள் கொடுத்த நோட்டீசுகளை மற்றொரு நாளில் எடுத்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம் என்றார்.

இதைத் தொடர்ந்து தங்களது மாநிலங்களின் முக்கிய பிரச்சனைகளை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால் மேல்-சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

அதேபோல் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பல்வேறு விவகாரங்களை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவர்களை அமைதியாக இருக்கையில் அமருமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News