இந்தியா

ஊழல் ஒழிப்புப் பிரிவை தொடங்கிய மேற்கு வங்க கவர்னர்- மம்தா எதிர்ப்பு

Published On 2023-08-03 05:49 GMT   |   Update On 2023-08-03 05:49 GMT
  • லஞ்சம், ஊழலுக்கு எதிரான புகார்களை பொதுமக்கள் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.
  • மாநில அரசின் நிர்வாகத்திலும், உரிமையிலும் தேவையில்லாமல் தலையிடும் செயலாகும்.

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் ஊழல் ஒழிப்புப் பிரிவு ஒன்றை கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ் தொடங்கி உள்ளார். இதற்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊழல் ஒழிப்புப் பிரிவு அமைக்கப்பட்டது. இதில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான புகார்களை பொதுமக்கள் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-

ஊழல் ஒழிப்புப் பிரிவு என்று ஒன்றை கவர்னர் உருவாக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது கவர்னர் மாளிகையின் வேலையல்ல. நாங்கள் கவர்னர் மீது மரியாதை வைத்துள்ளோம். அதே நேரத்தில் அவர் தன்னிச்சையாக ஒரு பிரிவை உருவாக்கி உள்ளார். இது மாநில அரசின் நிர்வாகத்திலும், உரிமையிலும் தேவையில்லாமல் தலையிடும் செயலாகும்.

கவர்னர் என்ற முகமூடியை அணிந்துகொண்டு பா.ஜ.க.வின் உத்தரவுகளுக்கு இணங்க செயல்படுவதை ஏற்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் கவர்னருக்கான பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

மேலும் தனது சொந்த மாநிலமான கேரளத்தில் இருந்து ஒருவரை மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக் கழக துணைவேந்தராக கவர்னர் ஆனந்த போஸ் நியமித்துள்ளார்.

அவருக்கு கல்வித் துறையில் எந்த அனுபவமும் இல்லை. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Tags:    

Similar News