ரெயில் டிக்கெட் முன்பதிவில் முதியோர், பெண்களுக்கு தானாகவே கீழ் 'பெர்த்' கிடைக்க வழிவகை
- மூத்த குடிமக்களுக்கான பயணக்கட்டண சலுகை 20-3-2020 முதல் திரும்பப்பெறப்பட்டது.
- 2019-2020-ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு அரசு ரூ.59,837 கோடி மானியம் வழங்கியது.
புதுடெல்லி :
நாட்டில் இயக்கப்படும் ரெயில்களின் எண்ணிக்கை, ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மற்றும் மூத்த குடிமக்கள், பெண்களுக்கு கீழ் 'பெர்த்' (கீழ்ப்படுக்கை) கிடைப்பதற்கான வசதிகள் குறித்து மக்களவை உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி (தி.மு.க.) மற்றும் தீபக் அதிகாரி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாட்டில் 2,687 பயணிகள் ரெயில்கள், 2,032 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட மொத்தம் 10,378 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மூத்த குடிமக்களுக்கான பயணக்கட்டண சலுகை 20-3-2020 முதல் திரும்பப்பெறப்பட்டது.
2019-2020-ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு அரசு ரூ.59,837 கோடி மானியம் வழங்கியது. மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கியதில் அந்த ஆண்டு சுமார் ரூ.1,667 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
ரெயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும் முன்பதிவின்போது கீழ் 'பெர்த்' தானாகவே கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இது தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் 6 முதல் 7 படுக்கை என்ற அளவிலும், 3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 4 முதல் 5 படுக்கை என்ற அளவிலும், 2 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 3 முதல் 4 படுக்கை என்ற அளவிலும் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.