அழைப்பு விடுத்த ஆக்ஸ்போர்டு - ஏற்றுக்கொண்ட மம்தா
- தொழில் துறையை மேம்படுத்த மேற்கு வங்க உலக வர்த்தக சந்திப்பு நடைபெற்றது
- தான் பட்ட துன்பங்களை குறித்து மம்தா உரை ஆற்ற வேண்டும் என்றார் மிச்சி
இந்தியா மற்றும் அயல்நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், மேற்கு வங்கத்தில் முதலீடு செய்து தொழில்துறையை ஊக்குவிக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அங்கு உலக வர்த்தக சந்திப்பு நடைபெறுகிறது.
நேற்று, மேற்கு வங்க உலக வர்த்தக சந்திப்பில் (Bengal Global Business Summit) மேற்கு வங்க முதல்வரின் தலைமை ஆலோசகர் அமித் மித்ரா, ஆக்ஸ்போர்டு துணைவேந்தரும் (pro-vice-chancellor) அறிவுசார் பரிமாற்ற துறையின் பேராசிரியருமான ஜொனாதன் மிச்சியை (Jonathan Michie) உரையாற்ற அழைத்தார்.
அப்போது ஜொனாதன் மிச்சி தெரிவித்ததாவது:
இனவெறிக்கு எதிராகவும் சமூக அமைதியை நிலைநாட்டவும் மம்தா பானர்ஜி மேற்கொள்ளும் முயற்சிகள் எங்களை நெகிழ செய்துள்ளது. அடுத்த வருடம் ஜூன் மாதம், எங்கள் பல்கலைக்கழகத்திற்கு அவர் வருகை தந்து தனது வாழ்நாளில் பட்ட துன்பங்களையும், போராட்டங்களையும், அதை தாண்டிய அவரது சாதனைகளையும் குறித்து உரையாற்ற அழைத்தோம். ஆக்ஸ்போர்டில் இந்தியர்கள் பலர் கல்வி பயில்வதால், மம்தாவின் உரை எங்கள் மாணவ மாணவியர்களாலும், பேராசிரியர்களாலும் மிகவும் விரும்பப்படும். எங்கள் அழைப்பை அவர் ஏற்று கொண்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு மிச்சி கூறினார்.
தென்மேற்கு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையர் (Oxfordshire) பிராந்தியத்தில் உள்ளது ஆக்ஸ்போர்டு (Oxford) நகரம். உலக புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (Oxford University) இந்நகரத்தில் உள்ளது. தொன்மை வாய்ந்த இப்பல்கலைக்கழகம், 900 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 38 கல்லூரிகள் இணைந்துள்ளன. அவற்றில் உலகின் பல பகுதிகளில் இருந்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பல்வேறு ஆய்வுகளுக்காக 70 துறைகள் அங்கு இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.