இந்தியா

'மணிப்பூர் கலவரத்துக்கு காரணமே ப.சிதம்பரம் தான்..' முதல்வர் பைரன் சிங் தடாலடி

Published On 2024-11-20 10:25 GMT   |   Update On 2024-11-20 10:26 GMT
  • 5000 துணை ராணுவத்தினர் அனுப்பப்பட்டதை விமர்சித்தார்.
  • இயக்க தலைவரை சந்தித்த புகைப்பட ஆதாரமும் இருக்கிறது

மணிப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்தி கொல்லப்பட்ட பின்னர் அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த வாரம் முதலே அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை திணறி வருகிறது. மத்தியிலிருந்து கூடுதலாக ஆயுதக் காவல் படையினர் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த வருடம் நாடு முழுவதும் மணிப்பூர் கலவரம் அதிர்வலையை ஏற்படுத்தியதை போல தற்போதைய மணிப்பூர் சூழல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மணிப்பூர் பற்றி எரிவதை பா.ஜ.க. விரும்புகிறது என்றும் ஜனாதிபதி இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட நாடு முழுவதிலும் அரசியல் தலைவர்கள் மணிப்பூர் கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் மணிப்பூர் குறித்து  எக்ஸ் பக்கத்தில்  பதிவு ஒன்றை வெளியிட்டார்.

தனது பதிவில், மணிப்பூர் சூழலுக்கு முதல்-மந்திரி பைரோன் சிங் திறமையின்மைதான் காரணம் என்றும் தற்போது 5000 துணை ராணுவத்தினர் அனுப்பப்பட்டதையும் விமர்சித்து இருந்தார்.

இதற்கு மணிப்பூர் முதல்-மந்திரி பைரோன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் மணிப்பூரில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கு ப.சிதம்பரத்தின் முந்தைய செயல்பாடுகளே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்தார். அப்போது மணிப்பூரில் இபோபிசிங் முதல்வராக இருந்தார். அப்போது ப.சிதம்பரம் மியான்மரை சேர்ந்த வெளிநாட்டவரான தங்கலியன் பாவ் கைட் என்பவரை அழைத்து வந்தார். அந்த நபர் மியான்மர் நாட்டில் தடை செய்யப்பட்ட ஜோமி மறு ஒருங்கிணைப்பு ஆர்மி என்ற இயக்கத்தின் தலைவர் ஆவார்.

தற்போது மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவுவதற்கு அடிப்படை காரணமே சட்ட விரோதமாக மியான்மரில் இருந்து குடியேற்றங்கள் நடந்ததுதான். இதற்கு காரணமாக இருந்தது ப.சிதம்பரம்தான். அவர் தடை செய்யப்பட்ட அந்த இயக்க தலைவரை சந்தித்த புகைப்பட ஆதாரமும் இருக்கிறது என்று மணிப்பூர் முதல்வர் குற்றம்சாட்டினார்.

 

இதற்கிடையில் முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரியான ஒக்ராம் இபோபி சிங்கும் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு கார்கேவிடமும் புகார் கூறினார். இதையடுத்து கார்கேவும் தலையிட்டார். எனவே ப.சிதம்பரம் தனது பதிவை நீக்கினார். 

Tags:    

Similar News