இந்தியா (National)

பாண்டியன் என் வாரிசு அல்ல: நவீன்பட்நாயக் அதிரடி அறிவிப்பு

Published On 2024-05-31 11:48 GMT   |   Update On 2024-05-31 11:48 GMT
  • ஏன் இதுபோல ஆதாரமே இல்லாமல் பேசுகிறார்கள்.
  • வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை.

புவனேஸ்வரம்:

ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு பிஜு ஜனதாதளம் இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கு பா.ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது.

ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியில் முக்கிய தலைவராக இருப்பவர் வி.கே.பாண்டியன். தமிழகத்தை சேர்ந்த இவர் ஒடிசாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர். இவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

அதன் பிறகு தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரை குறிவைத்தே ஒடிசாவில் பா.ஜ.க. பிரசாரம் செய்தது.

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஒடிசா மாநிலத்தை ஆள வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று பா.ஜ.க. அங்கு பிரசாரம் செய்தது. அதாவது நவீன் பட்நாயக்கிற்கு பிறகு பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக வி.கே.பாண்டியன் தேர்வு செய்யப்படுவார் என்பதே பா.ஜ.க.வின் பிரசாரமாக இருந்தது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார். வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என்பதை அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நவீன் பட்நாயக் கூறியதாவது:-

ஒடிசாவில் அனைத்து முடிவுகளையும் வி.கே.பாண்டியன் தான் எடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது அபத்த

மானது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் நான் பல முறை விளக்கமளித்துவிட்டேன். இதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. வி.கே.பாண்டியனை எனது அரசியல் வாரிசாக சிலர் கூறுகிறார்கள். அது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு.

என்ன ஒரு முட்டாள்தனமான பேச்சு. ஏன் இதுபோல ஆதாரமே இல்லாமல் பேசுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் தேர்தலில் கூட இதுவரை போட்டியிட்டது இல்லை.

ஒடிசாவிலும் சரி, நாடு முழுவதும் சரி, பா.ஜ.க.வுக்கு எதிராக அதிருப்தி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விரக்தியடைந்த பா.ஜ.க.வினர் இதுபோல பேசி வருகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

எனக்கு ஒரு அரசியல் வாரிசை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை. எனக்கு பிறகு யார் என்பதை ஒடிசாவில் உள்ள மக்கள் தான் முடிவு செய்வார்கள். இதை நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். இவை எல்லாம் இயல்பாகவே நடக்கும். இத்தனை காலம் இந்த கட்சி எப்படி மக்களுக்கு சேவை செய்து வந்ததோ, அதுபோல வரும் காலத்திலும் தொடர்ந்து தானாகவே நடக்கும்.

இந்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிச்சயமாக நான் தான் முதல்-மந்திரியாக இருப்பேன். நான் கடந்த 27 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்சியின் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டது. இதுவரை நான் அதை சிறப்பாக நடத்தி வருகிறேன். வரும் காலத்திலும் இதையே நான் தொடர்ந்து செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News