தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை என்கிறார் அஜித் பவார்: மகனை களம் இறக்க திட்டமா?
- நான் ஏழு அல்லது எட்டு முறை போட்டியிட்டுள்ளேன். எனக்கு தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை.
- எனது மகன் ஜெய் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடுவது குறித்து பாராளுமன்ற குழு முடிவு செய்யும்.
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவார், ஏழு அல்லது எட்டு முறை வெற்றி பெற்றுள்ளேன். இதனால் தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவார் பாராமதி சட்டமன்ற தொகுதியில் பலமுறை வெற்றி பெற்றுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அவரது மகன் ஜெய் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பாராமதி தொகுதியில் மக்கள் உங்கள் மகனை நிறுத்த வற்புறுத்தினால் அவர் நிறுத்துவீர்களா? என்ற கேள்விக்கு அஜித் பவார் பதில் அளித்து கூறியதாவது:-
இது ஜனநாயகம். நான் ஏழு அல்லது எட்டு முறை போட்டியிட்டுள்ளேன். எனக்கு தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை. மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனது மகன் ஜெய் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால், இது தொடர்பாக பாராளுமன்ற குழுவில் விவாதம் நடத்துவோம்.
பாராளுமன்ற குழு மற்றும் மக்கள் ஜெய் பாராமதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்பினால் தேசியவாத காங்கிரஸ் அவரை நிறுத்துவதற்கு தயார்.
எனக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. லட்கி பஹின் (Ladki Bahin) திட்டம் மூலம் பெண்களுக்கு முதல் தவணையாக 1500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 35 லட்சம் பெண்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அஜித் பவார் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனில் தட்காரே, "தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அஜித் பவார் சொல்லவில்லை. அவர் சில திட்டம் வைத்திருப்பார். முடிந்தவரை அதிகமான இடங்களை பிடிக்க விரும்புகிறோம்" என்றார்.
அஜித் பவாரின் மூத்த மகன் பர்த் பவார் மாவல் மக்களவை தொகுதியிலா் 2019-ம் ஆண்டு போட்டியிட்டு மிகப்பெரிய வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.