ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு: கொல்கத்தா நடை பயணத்தின்போது பரபரப்பு
- மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.
- இன்று மேற்கு வங்காளத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று கொல்கத்தா மாநிலத்தில் அவரது நடைபயணம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி மேற்கு வங்காள மாநிலத்தின் கதிஹார் என்ற இடத்தில் நடைபயணம் மேற்கொண்டு வந்தார். அப்போது ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சில் கார் கண்ணாடி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. லேசான தாக்குதல் சம்பவம் என்பதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில் "கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியிருக்கலாம். காவல்துறையினர் இந்த சம்பவத்தை புறக்கணித்துள்ளனர். போலீசாரின் புறக்கணிப்பால் ஏராளமான விசயங்கள் நடந்திருக்கலாம். இது சிறு சம்பவம்தான்" என்றார்.
கொல்கத்தா மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வது குறித்து தன்னிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என மம்தா பானர்ஜி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். மக்களவை தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி விலகியுள்ளார்.
இதனால் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.