ராகுல் எம்.பி. "பதவிநீக்க" வழக்கு - எம்.எல்.ஏ.விற்கு ஜாக்பாட்
- அனைத்து திருடர்களின் பெயர்களும் ஏன் "மோடி" என உள்ளது என்றார் ராகுல்
- 2023 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ராகுல் எம்.பி. பதவியை இழந்திருந்தார்
கடந்த 2019ல் இந்திய பாராளுமன்றத்திற்கான பொது தேர்தல் நடைபெற்றது. அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரச்சார கூட்டம் ஒன்று கர்நாடகாவில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி, மோடி, மோடி என ஏன் உள்ளது? நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி..." என கருத்து தெரிவித்திருந்தார்.
ராகுலின் கருத்து தங்கள் மோடி இனத்தையே அவமதிப்பதாக கூறி 2019, ஏப்ரல் 16 அன்று பா.ஜ.க.வை சேர்ந்த பூர்ணேஷ் மோடி (58) எனும் குஜராத் மாநில சட்டசபை உறுப்பினர், கிரிமினல் அவமதிப்பு வழக்கு ஒன்றை குஜராத் கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இதில் ராகுல் குற்றவாளி என தீர்ப்பானது.
அதனை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கும் அவர் குற்றவாளி என தீர்ப்பு உறுதியாகி 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறி போனது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ராகுல் பாராளுமன்ற உறுப்பினரானார். இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கினால், 2023 மார்ச் 24 முதல் 2023 ஆகஸ்ட் 7 வரை ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தாத்ரா நகர் மற்றும் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும், கோவா, டமன் மற்றும் டியு யூனியன் பிரதேசத்திலும் உள்ள பா.ஜ.க.வின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமை பொறுப்பாளராக பூர்ணேஷ் மோடியை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.
இப்பதவி பூர்ணேஷ் இதுவரை ஆற்றிய பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என பா.ஜ.க.வினர் கருத்து தெரிவிக்கின்றனர்.