3-ம் கட்ட வாக்குப்பதிவு: காஷ்மீரில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று பிரசாரம்
- வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
- தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடத்தப் படுகிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
கடந்த 18-ந்தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 2-ம் கட்டமாக நேற்று 26 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுபதிவு நடத்தப்பட்டது. 2 கட்ட வாக்குப்பதிவும் அமைதியாக நடந்து முடிந்தது.
மீதமுள்ள தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
காஷ்மீரில் எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பாரதீய ஜனதாகளம் இறங்கி உள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
3- ம் கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளில் இன்று மத்திய மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். பல்வேறு இடங்களில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
3-ம் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளில் வருகிற 29-ந்தேதியுடன் பிரசாரம் முடிவடைய இருக்கிறது.
இந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி போட்டியிடுகிறது. மேலும் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட மாநில கட்சிகளும் களத்தில் உள்ளன.
தேர்தலில் பதிவான ஓட்டுகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்று காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க போவது யார்? என்பது தெரிந்து விடும்.