அப்பாவி மாணவிக்கு நேர்ந்த பயங்கரம் - உடனடி நீதி வழங்கிய காவல்துறை
- மொபைலை பறி கொடுக்காமல் இருக்க, கீர்த்தி கெட்டியாக பிடித்து கொண்டார்
- காவல் அதிகாரிகளின் துப்பாக்கி சூட்டில் ஜிதேந்திராவிற்கு காலில் குண்டடி பட்டது
உத்தர பிரதேச மாநில காசியாபாத் நகரின் ஏபீஈஎஸ் பொறியியல் கல்லூரியில் (ABES Engineering College) முதலாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தவர் 19 வயதான கீர்த்தி சிங்.
கீர்த்தி, கடந்த அக்டோபர் 27 அன்று காசியாபாத்தின் மசூரி பகுதியிலிருந்து ஒரு பணிக்காக ஹாபூர் வரை பேருந்தில் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அங்குள்ள பேருந்து நிலையத்தை அடைய ஒரு ஆட்டோ ரிக்ஷாவில், தனது தோழி தீக்ஷா ஜிண்டாலுடன் தேசிய நெடுஞ்சாலையில் (NH-9) சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் ஆட்டோவிற்கு அருகில் ஒரு மோட்டார் பைக் வந்தது. அதை பல்பீர் என்பவர் ஓட்டி வந்தார்; ஜிதேந்திரா (28) என்பவர் பின்னால் அமர்ந்திருந்தார். கீர்த்தி சென்ற ஆட்டோவிற்கு அருகில் அந்த மோட்டார் பைக் இணையாக வந்தது.
அப்போது ஜிதேந்திரா, திடீரென கீர்த்தியின் கையிலிருந்த மொபைல் போனை பறிக்க முயன்றார். இதை எதிர்பாராத கீர்த்தி, மொபைலை பறி கொடுக்காமல் இருக்க அதனை கெட்டியாக பிடித்து கொண்டார். அந்த திருடர்கள் பைக்கை வேகமாக செலுத்தியதால், கீர்த்தி ஆட்டோவிலிருந்து கீழே விழுந்து, விழுந்த வேகத்தில் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார்.
இந்த விபத்தில் கீர்த்திக்கு பலமான காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அங்குள்ளவர்கள் உதவியுடன் கீர்த்தி அருகில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக கீர்த்தி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி வந்ததில் பைக்கை ஓட்டி வந்த பல்பீர் காவலர்களிடம் சிக்கினார்.
இதற்கிடையே, காவலர்கள் கங்கா நதி சாலையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு மோட்டார் பைக்கில் கீர்த்தியை தாக்கிய ஜிதேந்திராவும் மற்றொரு நபரும் சென்றனர். அவர்களை காவல்துறை அதிகாரிகள் நிற்க சொல்லி சைகை செய்தும் நிற்காமல் வேகமாக தப்பித்தனர்.
உடனடியாக காவல் அதிகாரிகள் அவர்களை பின் தொடர்ந்த போது, இருவரில் ஒருவர் துப்பாக்கியால் காவலர்களை சுட தொடங்கினார். இதில் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து காவல் அதிகாரிகள் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் ஜிதேந்திரா, காலில் குண்டடிபட்டு கீழே விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜிதேந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடி விட்ட அவருடன் பயணம் செய்த மற்றோருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த 2020ல் குண்டர்கள் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஜிதேந்திராவிற்கு எதிராக பல காவல் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.