கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பலி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி
- கனமழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
- விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு இந்த ஆண்டு மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ம.பி.யின் ஷாபூரில் உள்ள ஹர்தௌல் பாபா கோவிலின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ம.பி.யில் நடந்த விபத்து எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் எனபதிவிட்டுள்ளார்.