இந்தியா

பிரதமர் மோடிக்கு சொந்தமாக வீடு, கார் இல்லை- பிரமாண பத்திரத்தில் தகவல்

Published On 2024-05-14 14:11 GMT   |   Update On 2024-05-14 14:11 GMT
  • பிரதமர் மோடி இன்று தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
  • பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என தகவல்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று காலை 11.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று, தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் பா.ஜ.க. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பிரதமருடன் காணப்பட்டனர்.

பிரதமர் மோடியுடன் பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி, லால்சந்த் குஷ்வாஹா, பைஜ்நாத் படேல் மற்றும் சஞ்சய் சோன்கர் ஆகிய நான்கு பேர் முன்மொழிந்தனர். 

இந்நிலையில், பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2014ம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக வாரணாசியில் போட்டியிட்டு வரும் பிரதமர் மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பிரமாணப் பத்திரத்தில், அவர் ரூ.3.02 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், ரூ.52,920 ரொக்கத்தையும் வைத்திருக்கிறார் என்றும் அவருக்கு சொந்தமாக நிலம், வீடு, கார் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் வரிக்கு உட்பட்ட வருமானம் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்தில் இருந்து 2022-23ல் ரூ.23.5 லட்சம் என இரு மடங்காக உயர்ந்துள்ளது. 

பாரத ஸ்டேட் வங்கியில் பிரதமர் மோடிக்கு இரண்டு கணக்குகள் உள்ளன. எஸ்பிஐயின் காந்திநகர் கிளையில் ரூ.73,304 டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், எஸ்பிஐயின் வாரணாசி கிளையில் ரூ.7,000 மட்டுமே உள்ளது.

பிரதமருக்கு எஸ்பிஐயில் ரூ.2,85,60,338 நிலையான வைப்புத்தொகை உள்ளது.

பிரதமரிடம் ரூ.2,67,750 மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்களும் உள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு தேர்தலைவிட இந்த முறை பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News