நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு நல்ல சகுனம்.. பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
- நாட்டு மக்கள் எங்கள் அரசின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
- இந்த தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்குதான் சோதனையே தவிர, எங்களுக்கு அல்ல.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று 3-வது நாள் விவாதம் நடந்தது. கடந்த 2 நாட்களில் பெரும்பாலான கட்சிகளுக்கு இந்த தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே இன்று இவர்களுக்கு குறைந்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது.
விவாதத்தை இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழியின் குற்றச்சாட்டுக்கும் காரசாரமாக பதில் அளித்தார்.
விவாதம் நிறைவடைந்ததை அடுத்து 5 மணியளவில் விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-
நாட்டு மக்கள் எங்கள் அரசின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கையில்லா தீமானத்தை கடவுளின் ஆசீர்வாதமாக கருதுகிறேன். 2018ல் என் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அதன்பின் தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் ஏற்கனவே பெற்ற இடங்களைக்கூட பெற முடியவில்லை. எனவே, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு நல்ல சகுனமாக உள்ளது. இந்த தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்குதான் சோதனையே தவிர, எங்களுக்கு அல்ல.
மக்களின் ஆசியுடன், முந்தைய சாதனைகளை முறியடித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பாஜகவும் மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நீங்கள் (எதிர்க்கட்சிகள்) முடிவு செய்துள்ளதாகவே நான் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.