இத்தாலியில் இருந்து பிரதமர் மோடி நாடு திரும்பினார்
- தொழில் நுட்பத்தில் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
- செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய மூலோபாயத்தை வகுத்த முதல் சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி ஜி-7 அமைப்பின் மாநாடு இத்தாலியில் நடந்தது. இதில் இத்தாலியின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் மெக்ரான், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகிய நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பல்வேறு விஷயங்களை பற்றி ஆலோசனை நடத்தினார்.
மேலும் போப் ஆண்டவர் பிரான்சிசை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருவரும் ஆரத்தழுவிக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது, போப் ஆண்டவர் பிரான்சிசை இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, தொழில் நுட்பத்தில் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஒரு உள்ளடக்கிய சமுதாயத்தின் அடித்தளத்தை அமைப்பதற்கு அது ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவுக்கு குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து தொழில்நுட்பத்தில் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வருவதன் முக்கியத்துவம் நாம் உணர வேண்டும். செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய மூலோபாயத்தை வகுத்த முதல் சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்றார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்டார். பிரிண்டிசி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவரை இந்திய மற்றும் இத்தாலி அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.
இத்தாலியில் இருந்து புறப்பட்ட மோடி இன்று காலை நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
சமீபத்தில் 3-வது முறையாக பிரதமர் பதவியேற்ற பிறகு மோடி தனது வெளிநாட்டு பயணமாக இத்தாலி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.