இந்தியா

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க செயல்திட்டம்- உயர்மட்ட கூட்டத்தில் மோடி அறிவுறுத்தல்

Published On 2023-04-21 11:10 GMT   |   Update On 2023-04-21 11:10 GMT
  • வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.
  • இந்திய குடிமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

புதுடெல்லி:

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளிடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுகின்றனர். இந்தியர்கள் உள்ள பகுதிகளிலும் தாக்குதல் நடைபெறுகிறது. சூடானின் பல்வேறு பகுதிகளில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், சூடான் நிலவரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் தூதரக அதிகாரிகள், விமானப்படை தளபதி ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சூடானில் உள்ள நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்தியர்களை துரிதமாக மீட்பது குறித்த மீட்பு திட்டங்களை தயாரிப்பது குறித்தும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

சூடானின் தற்போதைய சூழல் குறித்து பிரதமர் ஆய்வு செய்ததுடன், சூடான் முழுவதும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களின் பாதுகாப்பை தொடர்ந்து மதிப்பீடு செய்து அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று கூறினார். அங்கு இந்தியர் பலியானதற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News