இந்தியா

பாராளுமன்ற விவாதங்களில் ராகுல்காந்தி மாதிரி நடந்து கொள்ளாதீர்கள்- பிரதமர் மோடி

Published On 2024-07-02 08:44 GMT   |   Update On 2024-07-02 08:44 GMT
  • உங்கள் தொகுதி மக்களுடன் நீங்கள் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்.
  • டெல்லியில் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பிரதமர்களின் அருங்காட்சியகத்துக்கு சென்று பாருங்கள்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்து வருகிறது. நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அவரது பேச்சு மிகவும் ஆவேசமாக இருந்தது. குறிப்பாக பா.ஜ.க. தலைவர்களை குற்றம்சாட்டி அவர் பேசியது அனல் பறக்கும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பிரதமர் மோடி வந்தபோது அவருக்கு எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி மலர்மாலை அணிவித்து பிரதமர் மோடியை வரவேற்றார். சிரக்பஸ்வான், ஜி.கே.வாசன் ஆகியோரும் பிரதமர் மோடியை கை குலுக்கி வரவேற்றனர். எம்.பி.க்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த பிரதமர் மோடி கூட்டத்தில் உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேச்சு விவரம் வருமாறு:-

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். நமது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு எம்.பி.க்களும் நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும். உங்கள் தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை கொடுங்கள்.

பாராளுமன்றத்தில் நீங்கள் அனைத்து விவாதங்களிலும் கலந்துகொண்டு உங்கள் தொகுதி மக்களுக்காக நன்மைகளை பெற்று கொடுக்க வேண்டும். அதே சமயத்தில் பாராளுமன்றத்தின் மரபுகள் மற்றும் விதிகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். பாராளுமன்ற மூத்த உறுப்பினர்கள் எவ்வாறு சிறப்பாக நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு போதும் பாராளுமன்ற மரபுகளை மீறக்கூடாது.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும்போது மரபுகளை மீறி நடந்து கொண்டார். பாராளுமன்றத்தில் நீங்கள் அவ்வாறு ராகுல்காந்தி போன்று நடந்து கொள்ளாதீர்கள். அவர் போல ஒரு போதும் செயல்படாதீர்கள்.

பொதுவாக காந்தி குடும்பத்தினருக்கு தங்களது குடும்பத்தினரை சாராத ஒருவர் பிரதமராக பதவி வகித்தால் பிடிக்கவே பிடிக்காது. அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மற்றவர்கள் பிரதமராக இருப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள இயலாது.

தற்போதைய நிலையை பார்க்கும்போது காந்தி குடும்பத்தினர் மிகவும் கோபத்துடனும், விரக்தியுடனும் இருப்பது தெரிகிறது. அதன் வெளிப்பாடுதான் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் பேச்சு. அவர்களது விரக்தி ராகுல் பேச்சில் எதிரொலித்தது.

சாதாரண டீ கடைக்காரரின் மகன் 3-வது முறையாக பிரதமராகி இருப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. எனவே வெறுப்புடன் பேசுகிறார்கள். என்றாலும் நாம் மக்களின் நலனே முக்கியம் என்று செயல்பட வேண்டும்.

பாராளுமன்றத்தில் எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு கேள்வி கேட்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொரு எம்.பி.யும் கற்று தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக நமது கூட்டணி எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தவறாமல் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு விவாதத்தின்போது தங்களது தொகுதிக்கு அதில் ஏதாவது நன்மை பெற முடியுமா? என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்போது அதுபற்றி கருத்து தெரிவிக்கும் முன்பு அதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஊடகங்கள் முன்பு பேசுவதற்கு முன்பும் தெளிவாக அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் தொகுதி மக்களுடன் நீங்கள் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்கள் உங்களை எளிதில் அணுகும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களை எம்.பி.யாக தேர்வு செய்ததற்காக அவர்களுக்கு தவறாமல் நன்றி சொல்லுங்கள். டெல்லியில் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பிரதமர்களின் அருங்காட்சியகத்துக்கு சென்று பாருங்கள்.

அங்கு அனைத்து பிரதமர்களின் வாழ்க்கை பயண குறிப்புகள் ஆவணமாக தொகுத்து வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முந்தைய அரசு செய்யாத ஒன்றை அங்கு நாம் செய்து வைத்துள்ளோம். உங்களுக்கு அதன் மூலம் பல தகவல்கள் கிடைக்கலாம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதையடுத்து எம்.பி.க்கள் அனைவரும் பிரதமர் மோடி காட்டிய வழிகாட்டுதல்படி நடந்துகொள்வதாக உறுதியளித்தனர்.

Tags:    

Similar News