பிரதமர் மோடி ஜூலை 8-ம் தேதி ரஷியா பயணம்
- ரஷியாவும், இந்தியாவும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஆழ்ந்த நட்பை கொண்டுள்ளன.
- கடந்த மார்ச் மாதம் ரஷியாவுக்கு வருகை தரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடப்பட்டது.
புதுடெல்லி:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டு கடந்துள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக அளவிலான பேச்சு வார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபடவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதற்கு இரு நாடுகளும் உடன்படவில்லை. ஆனாலும், ரஷியாவுடனான இந்தியாவின் நல்லுறவு தொடர்ந்து வலுவாக உள்ளது.
ரஷியாவும், இந்தியாவும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஆழ்ந்த நட்பை கொண்டுள்ளன. இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் ரஷியாவுக்கு வருகை தரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடப்பட்டது.
பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிழக்கு நகரான விளாடிவோஸ்டாக்கிற்கு பிரதமர் மோடி சென்றார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புதினைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஜெய்சங்கரிடம் பேசிய அதிபர் புதின், எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் காண்பதற்கும், அனைத்து நடப்பு சூழல்களைப் பற்றி ஆலோசிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி ஜூலை மாதம் 8ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ரஷியா மற்றும் ஆஸ்திரியாவுக்கு பயணம் செய்ய உள்ளார் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசுவார் என தெரிகிறது.