பாராளுமன்ற அத்துமீறல் பின்னணி காரணங்களை தெரிந்து கொள்ளவேண்டும்: பிரதமர் மோடி
- பாராளுமன்ற அத்துமீறல் விஷயம் கவலைக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 13-ம் தேதி கூட்டத்தொடர் நடந்தபோது மக்களவை மற்றும் பாராளுமன்ற வளாக வாயிலில் சிலர் வண்ண புகை குண்டுகளை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் மக்களவையில் புகுந்த நபரை எம்.பி.க்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை அடித்து, தாக்கவும் செய்தனர். இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து வைரலாகியது.
இந்நிலையில், பாராளுமன்ற அத்துமீறல் குறித்து செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:
மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் ஒரு தீவிரமான விவகாரம்.
பாதுகாப்பு மீறல் ஒரு துரதிர்ஷ்டவசமானது. கவலைக்குரிய விஷயம் ஆகும். இது பற்றி விவாதிக்க தேவையில்லை.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் புலனாய்வு அமைப்புகள் முழு விசாரணை நடத்தி வருகின்றன.
இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் திட்டம் என்ன? வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்து தீர்வு காண வேண்டும் என்பது குறித்து நாம் முடிவெடுக்க வேண்டும்.
தாக்குதலுக்கான காரணத்தை விரைவில் கண்டுபிடிப்பார்கள் என தெரிவித்தார்.